தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை, எம்.ஏ., எல்.டி.


தாயின் அன்பையும், சேயைச் ⋄சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும்¹, பண்டாரமும்², தட்டாரும்³, கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு ∙வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே.

சில ·தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே


இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி¹ செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.

உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?


தனது அண்ணன் தம்பிமார்களை ஏற்றிப் போற்றுவதும், கேலி செய்து மகிழ்வதும், தமிழ்ப் பெண்களின் தாலாட்டு மரபு,

பாமரர் தாலாட்டில் தொட்டில் 1 செய்த தச்சனையும் காப்புச் செய்து தந்த தட்டானையும் இன்னும் இவர் போன்ற பிற தொழிலாளர்களையும் பாராட்டிப் பாடும் வழக்கமும் உள்ளது.

அது போலவே பூக்கொண்டுவரும் பண்டாரமும், போற்றுதலுக்கு உரியனாவான்,

தாலாட்டுகளில் உறவினர் முறையை உறுதிப்படுத்திக் கொள்ளும் சடங்கு அன்று ஒவ்வொருவரும் குழந்தைக்கு அளிக்கும் பரிசுகள் வரிசையாகக் கூறப்படும்,

பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே ! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !


வட்டார வழக்கு : கன்னாரே, பின்னாரே-பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).

இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச் செய்யாவிட்டால் மாமியார் முகம் கோணலாகிவிடும்.

எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு விடாமல் சொல்லி வரும். வங்காளத்தில் “பாரோ மாசி” என்ற நாடோடிப் பாடல் வகை உள்ளது. அதில் பன்னிரெண்டு மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும் உழவு வேலைகளையும் ஒரு கதையோடு தொடர்புபடுத்திப் பாடுவார்கள். இவற்றுள் எல்லா வகைகளைப் பற்றியும் “தூசன்ஸ்பக்விட்டல்” என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர் ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். அவற்றுள் ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம் செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக் கூறப்படுகின்றன. உதாரணமாக எந்த மாதத்தில் ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த் தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும் என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும். பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக இருக்கும். உழவர் ‘பாரோ மாசி’ தான் இவ்வகைப் பாடல்களிலேயே புராதனமானது. அவற்றிலிருந்து கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும் தோன்றியிருக்கின்றன. வங்காளத்துப் ‘பாரோ மாசி’யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில் தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள். இவ்வறிவுரை மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.

மார்கழி மாசத்திலேதான்-கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே

தைப் பொங்கல் காலத்திலே-கண்ணே நீ
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே-கண்ணே நீ
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே-கண்ணே நீ
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே-கண்ணே நீ
சீர் வரிசை வாங்கையிலே,
வைகாசி மாசத்திலே-கண்ணே நீ
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே-கண்ணே நீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில்-கண்ணே நீ
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே-நீ
அப்பன் வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும்-கண்ணே
கடவுளுக்குக் கையெடடி.


தாயின் குடும்பம் எத்தொழிலைச் செய்து வாழ்கிறதோ அத்தொழில் தாலாட்டில் பெருமையாகக் கூறப்படுகிறது. மீனவர் குலத்தைச் சேர்ந்த தாய் மீன் பிடித்து, விற்றதைப் பற்றியும், விற்ற பணத்தில் அரைமூடி செய்ததைப் பற்றியும் பாடுகிறாள்.

ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.

அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.

அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்

இவ்வாறு தாய் குடும்பத் தொழிலின் பெருமையைப் பாடுவாள். சர்க்கார் உத்தியோகம் மிக மேன்மையானது என்ற நம்பிக்கை இங்கே வெளியிப்படுகிறது.

தந்தையின் பயணத்தைச் சொல்லுகிற தாலாட்டும், வேட்டையைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், திருவிழாக்களைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், தாய் மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும் எந்த விஷயமும் தாலாட்டில் பொருளாகச் சேர்க்கப்படக் கூடும்.

தாலாட்டு குழந்தைப் பாசத்தை முதன்மைப்படுத்துவதாயினும், சமூகச் சித்திரம் என்னும் பின்னணியில்தான் பல்வேறு வகைப்பட்ட பின்னல்களாக எழுகின்றன.

இப்பாடல்கள் தாய்மாரின் செல்வநிலை, ஜாதி இவை பொறுத்து வேறுபடும்.

நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.