களப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பது உண்மையா?

 ட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள பகுதிகள்) மீது படையெடுத்தார்கள்!... இந்தப் பெரும் நிலப்பரப்பைத் தன் ஆளுகைக்குக் கீழ்க் கொண்டு வந்தார்கள்!... சுமார் 300 ஆண்டுகள் இவர்கள் ஆட்சியின் கீழ் தென்னாடு இருந்தது!... இது அனைவரும் அறிந்ததே! ஆனால்...

ஒவ்வொரு முறையும் தமிழக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது மனதை நெருடும் ஒரு கேள்வி...

மூவேந்தர்களை வீழ்த்தினார்களா களப்பிரர்கள்?...

இது ஒருவிதமான உறுத்தலை அளிக்கிறது.

என்ன, தமிழ்த்தாய் மைந்தர்களான மூவேந்தர்கள் வீழ்த்தப்பட்டார்களா!!...

உண்மையில் அது நடந்ததா?!...
அயலார் படை நம் தமிழ் நிலத்தின் மாபெரும் பேரரசுகளை வெற்றி கொண்டதா?!!...
அது எப்படி சாத்தியம்?...
இந்தக் கேள்விகளிலிருந்து தொடங்கியதே இந்தத் தேடல்.

கி.பி 253 - 290 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் களப்பிரர்கள் தமிழ்நாடு மீது படையெடுத்ததாக அறிஞர்களின் கூற்று. அதே காலக்கட்டத்தில் - அதாவது கிபி-3ஆம் நூற்றாண்டில் - தமிழகத்தின் அரசியல் நிலைமை என்ன தெரியுமா?

வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!


முதலில் சோழர்கள்! தமிழன் வீரத்தையும் மொழியையும் உலகறியச் செய்தவர்கள். ஏனைய இரு பேரரசுகளைப் போல் அல்லாமல் கடல் பல கடந்து பல நாடுகளை வென்றவர்கள்! ஆசியக் கண்டத்தின் பாதியைத் தன் ஆளுகைக் கீழ்க் கொண்டு வந்து புலிக்கொடி பறக்க ஆண்டவர்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட சோழப் பேரரசு களப்பிரர் படையெடுப்பின்பொழுது முழுவதும் வீழ்ச்சியுற்று இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், களப்பிரர் வரும் முன்பே தமிழகத்தில் சோழ அரசு வீழ்ந்திருந்தது.

சான்று-1

மணிமேகலை கூறும் செய்தி: சோழ மன்னன் பெருங்கிள்ளியின் காலத்தில் அந்நாட்டின் தலைநகரமான புகார் கடலால் கொள்ளப்பட்டது. மன்னன் இந்திர விழா எடுக்காததுதான் இந்தப் பேரழிவிற்குக் காரணம் என்றெண்ணிய மக்கள் சோழனைத் தூற்றியதால் தலைநகரை இழந்த சோகத்துடன் அரசன் நாடு நீங்குகிறான். சோழப் பேரரசு வீழ்கிறது.

சான்று-2

பல்லவர்கள் வேலூர்ப் பட்டயம்: சோழ நாட்டின் மேற்கண்ட சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பல்லவர்கள் அந்நாட்டின் ஒரு பகுதியான தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிப் பல்லவப் பேரரசை நிறுவுகிறார்கள். திருச்சி வரையுள்ள சோழ நாடு பல்லவர்கள் கையில் சென்று விடுகிறது. இதற்குப் பிறகு, அதாவது பல்லவப் பேரரசு சோழநாட்டை பிடித்து 40 ஆண்டுகளில் அல்லது அதற்குப் பின்னர்தான் களப்பிரர் படையெடுப்பு நிகழ்கிறது. அப்பொழுது சோழ அரசு என்கிற ஒன்றே இல்லை.

அடுத்து, சேரர்களைப் பொறுத்த வரையில், செங்குட்டுவனுக்குப் பிறகு சேரர்களில் வலிமையான மன்னன் இல்லை. குறிப்பாக, கி.பி 3-ஆம் நூற்றாண்டின் கடைசியில் சேர நாடு பாண்டியர்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

ஆக, களப்பிரர் வருகையின்போது மூவேந்தர்களில் இங்கே இருந்தவர்கள் பாண்டியர்கள் மட்டுமே! எனவே களப்பிரர்கள் மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பதே முற்றிலும் தவறு! தமிழ்நாட்டின் பலவீனமான சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு படையெடுத்து வந்திருக்கிறார்கள். முக்கியமாக, சோழப் பேரரசின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இங்கே இன்னொரு வரலாற்றுச் சான்றைப் பதிவிட விரும்புகிறேன்.

முடிசூடா மன்னன் களப்பிரன்


தமிழகத்தைப் பிடித்த களப்பிர மன்னர் தில்லை (சிதம்பரம்) வாழ் அந்தணர்களிடம் தமக்குச் சோழ அரசின் மகுடத்தை அணிவித்து முடிசூட்டும்படி கேட்டிருக்கிறார்*. ஆனால் தில்லை வாழ் அந்தணர்கள் சோழ மரபில் வரும் அரசர்களுக்கே தாங்கள் முடிசூட்டுவோம் என்று மறுத்து விட்டனர். இதனால் சோழ நாட்டுக்கு முறையாக முடிசூடாமலே களப்பிர அரசர் ஆட்சி செய்தார் என்பது வரலாறு.

மூன்று பேரரசுகளையும் கைப்பற்றிய களப்பிரர்கள் சேர பாண்டியர்களுடையவற்றைத் தவிர்த்துச் சோழர்களின் அரச முடியை மட்டும் ஏன் விரும்பினார்கள்? ஏனெனில், சோழப் பேரரசு நல்ல நிலைமையில் இருந்திருந்தால் இந்தப் படையெடுப்பு சாத்தியமே ஆகியிருக்காது என்பதால்தான் என்பது என் கணிப்பு.

பண்டைய தமிழகத்தின் மீது மொத்தமே இரண்டு முறைதான் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. முதலில், மேற்சொன்ன களப்பிரர் படையெடுப்பு – கி.பி 3-ஆம் நூற்றாண்டு. இரண்டாவது, முகலாயர் படையெடுப்பு – கி.பி 14-ஆம் நூற்றாண்டு. அந்த இருமுறையும் சோழர்கள் இங்கு இல்லை என்கிறது வரலாறு.

இவர்கள் மட்டுமில்லை, இன்னும் சற்றுப் பின்னோக்கிச் சென்றால் இந்தியா முழுவதும் – ஏன், இந்தியாவைத் தாண்டி ஆப்கானிஸ்தான் வரை கூட - கைப்பற்றியிருந்த மௌரியப் பேரரசு கூடத் தமிழகத்தை மட்டும் தொடத் துணியவில்லை. தமிழ்நாட்டின் மீது அவர்கள் படையெடுத்ததாக எந்தச் சான்றும் இல்லை.

Maurya Empire

இதற்கான காரணம் பற்றிச் செவிவழிச் செய்தி ஒன்று இருக்கிறது.

மௌரியப் பேரரசின் ஆலோசகர் சாணக்கியர் சோழர்களிடம் நட்பாக இருக்கவே விரும்பியுள்ளார். அந்நாளில் சோழர்களின் கப்பற்படை மிகவும் வலிமையாக இருந்ததே அதற்குக் காரணம். அது போக கிரேக்கம், சீனம், ஐரோப்பிய நாடுகளிடம் சோழர்கள் வணிகம் செய்து வந்தார்கள். கீழே சோழர்கள் இருக்கும் வரை இங்கே மௌரியப் பேரரசு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணியே தமிழகத்தின் மீது படையெடுக்க அவர்கள் விரும்பவில்லை. எது எப்படியோ, எதிரி நம் மீது படையெடுக்கத் தயங்கியதே நமக்கு பெருமைதானே?

ஆகவே களப்பிரர்கள் மூவேந்தர்களையும் வீழ்த்தி விடவில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை! சேரர்கள், சோழர்கள் ஆகிய இருவருமே வலுக் குன்றி இருந்த நேரத்தில் பாண்டியர்களை மட்டும் எளிதாக வீழ்த்தி மூவேந்தர்களின் நிலத்தைக் கைப்பற்றினார்கள் என்பதே சரியானது.

தமிழ் நெஞ்சங்களே! நம் வரலாற்றைப் பேச நாம்தான் இருக்கிறோம். வேறு யாரும் அதற்கு முன்வர மாட்டார்கள்!
 

எனவே நம் பிள்ளைகளுக்கு நம் வரலாற்றைச் சரியாகக் கற்பிப்போம்!

ஏனெனில் நாம் வந்த தடம் அறியாமல் போகும் வழி தெரியாது! 

வாழ்க தமிழ்!!!

பி.கு.: அன்றைய சோழ அரசின் முடிசூட்டும் பொறுப்பு தில்லைவாழ் அந்தணர்களிடம் இருந்தது.
 

உசாத்துணை:

1. சேர மன்னர் வரலாறு, 2002, ஔவை சு.துரைசாமி 

2. சோழர் வரலாறு, 1985, முனைவர் மா.இராசமாணிக்கனார் 
3. பல்லவர் வரலாறு, 1944, முனைவர் மா.இராசமாணிக்கனார் 
4. பல்லவர் வரலாறு, 2016, ரா.மன்னர் மன்னன்
5. தமிழ் இலக்கிய வரலாறு, 2012, மு.அருணாச்சலம்


எழுத்து: ஷியாம் சுந்தர்           |           கணினி வரைகலை: மோஷிகா

படம்: நன்றி Avantiputra7 - Wikimedia Commons

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.