எம்.எஸ்.வி எனும் ஜாஸ் மேதை! - மெல்லிசை மன்னர் பற்றி இசையாழ்ந்த ஒரு பார்வை

MSV the Jazz music geniusமிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்றன. பல திரைப்படங்களைப் பொறுத்த வரை, அவற்றின் பெயர்கள் நம் நினைவில் நிற்கவில்லை என்றாலும் படத்தின் இசையும், பாடல்களும் நம் நெஞ்சில் ரீங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

1931-இல் வெளிவந்த தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி 1950-களில் கோலோச்சிய கே.வி.மகாதேவன் வரை பலரும் தம் இசை சுவரங்களால் இத்துறைக்குச் சிறப்புச் சேர்த்திருந்தாலும் அவ்விசை வடிவங்களில் கர்நாடக சாஸ்திரிய சங்கீதமே மேலோங்கி நின்றது. புதிய இசை வடிவங்களையோ அல்லது பெரிய வித்தியாசங்களையோ இயற்ற ஒரு இசைக்கலைஞரும் முன்வரவில்லை.

அப்பொழுதுதான் 1953-இல் ‘மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன்’ என்ற - பின்னாளில் எல்லோராலும் ‘எம்.எஸ்.வி’ எனப் பிரபலமாக அழைக்கப் பெற்ற - புதிய இளைஞர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ‘ஜெனோவா’ திரைப்படத்தில் மூன்றாவது இசையமைப்பாளராக அறிமுகமானார்.

முதலில் எம்.எஸ்.வி-யை இசையமைப்பாளராக ஏற்கத் தயங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள், பிறகு அவர் பாடல்களைக் கேட்ட பின்பு வீட்டிற்கே சென்று அவரை ஆரத் தழுவினார் என்பது வரலாற்றுப் பதிப்பு. அச்சிறப்பு மிக்க இசைக்கலைஞன் தொகுத்த இசையும் பாடல்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் 700-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு உயிரூட்டின.

எம்.எஸ்.வி-யின் இசை வடிவங்கள் அவருக்கு முன் இசையமைத்த கலைஞர்களின் வடிவங்களை விடச் சிறப்பாகவும் தனித்தன்மை வாய்ந்தவையாகவும் வெளிப்பட்டன. மெல்லிசை மன்னர் என்றும் அவர் போற்றப்பட்டார். அது நாள் வரையில் கர்நாடக சாஸ்திரிய சங்கீதத்தில் அமைந்திருந்த திரையிசைப் பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த தமிழ் நேயர்களுக்கு மெல்லிசை மன்னரின் இசை ஒரு புது மயக்கத்தையும் புத்துணர்வையும் அளித்தது.

அதுவரை இந்தியப் பாரம்பரிய இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி வந்த கலைஞர்களுக்கு மத்தியில் எம்.எஸ்.வி அவர்கள் சாக்சபோன், டிரம்ப்பெட், அக்கார்டியன், பாங்கோஸ், கீ-போர்டு, டீயூபா, பிக்காலோ, சைலோபோன் எனப் பல மேற்கத்திய இசைக்கருவிகளை அறிமுகப்படுத்தித் தமிழ்த் திரையிசையில் புது வெள்ளம் பாய்ச்சினார். அதே நேரம் கர்நாடக சங்கீதத்தையும் அவர் தவிர்க்கவில்லை.

எம்.எஸ்.வி அவர்கள் பல வடிவங்களில் இசை வழங்கியிருந்தாலும் ஆப்பிரிக்க-அமெரிக்க ஜாஸ், ஜெர்மன் வால்ட்ஸ் ஆகியவற்றின் தாக்கம் அவர் படைப்புகளில் மிகுந்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் மட்டுமே ஒலித்து கொண்டிருந்த இந்த இசையை முதன் முதலாகத் தமிழர் காதுகளுக்கு விருந்தளித்த பெருமை எம்.எஸ்.வி அவர்களையே சாரும். அவர் இயற்றிய பாடல்களில், குறிப்பாக சர்வர் சுந்தரம் படத்தில் ‘அவளுக்கென்ன’, புதிய பறவை படத்தில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, பெரிய இடத்துப்பெண் படத்தில் ‘அன்று வந்ததும் இதே நிலா’, அன்பே வா படத்தில் ‘ஹே… நாடோடி’, காதலிக்க நேரமில்லை படத்தில் ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’, ‘மலரென்ற முகம் ஒன்று’ ஆகிய பாடல்களில் ஜாஸ் இசையும் வால்ட்ஸ் வடிவமும் மிக அழகாகவும் ஆழமாகவும் வெளிப்பட்டிருக்கும்.

எம்.எஸ்.வி எனும் மாமேதை இயற்றிய பல பாடல்களிலும் இசையிலும் மெட்டுக்கள் ஒவ்வொன்றும் புதிய புதிய பரிமாணத்திலும் வித்தியாசமாகவும் அமைந்திருந்ததே அவரின் சிறப்பாயிற்று. பொதுவாகவே ஜாஸ் இசையின் கோக்கும் முறை (composition) இரண்டு அல்லது மூன்று சுருதிகளில் மாறி மாறி இசைத்து, ஆரம்பத்தில் ஒரு ராகமும் முடிவில் ஒரு ராகமுமாக நிறைவடையும். அதே பாணியில் பல பாடல்களுக்கு இசையமைத்து அதை அனைவரும் ரசிக்கும் விதத்திலும் இயற்றி அசத்தி இருப்பார் எம்.எஸ்.வி அவர்கள்.

புகழ் பெற்ற இசை விமர்சகரும் நடிகருமான ஷாஜி எம்.எஸ்.வி அவர்களின் இசையமைப்புக் குறித்து எழுதுகையில் “ஒரே பாடலில் அவர் பல மெட்டுகளைப் போட்டிருப்பார். ஒரே மெட்டைப் பல்வேறு விதமாக அமைத்திருப்பார். உணர்ச்சிகள் சார்ந்து சொற்களுக்குப் புதிய அர்த்தங்கள் கொடுத்திருப்பார். பல்லவி முடிந்ததும் பல பாடல்கள் முற்றிலும் வேறு கட்டத்துக்குச் செல்லும். முடியும் முன் சட்டென்று புதிய ஒரு மெட்டு வந்து சேரும். ஒரே ஒரு உதாரணம், ‘அன்புள்ள மான்விழியே’ என்ற பாடல். ஒவ்வொரு நான்கு வரிக்கும் புதிய மெட்டு வந்தபடியே இருக்கும் அப்பாடலில்!” என்று துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பார். மேலும் “விஸ்வநாதனின் இசையமைப்பு மேலோட்டமான நோக்கில் மிக எளிமையானது. உடனடியாக ரசிகனைக் கவர்வது. ஆனால் கூர்ந்து கவனிக்கும்போது அதன் ஆழங்கள் தெரியும்” என எம்.எஸ்.வி அவர்களின் இசைத்தன்மையை விவரித்திருப்பார். அது உண்மைதான்.

எத்தனை இசைக்கலைஞர்கள் வந்தாலும், எத்தனை பாடல்களை நாம் கேட்டாலும், இன்றும் என்றும் ரசிக்கக்கூடிய மறக்க முடியாத இசைக்காவியங்களை அளித்த எம்.எஸ்.வி அவர்கள் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த ஜாஸ் மேதை என்றேதான் சொல்ல வேண்டும்.

எழுத்து: எஸ்.பாலச்சந்தர் | தொடர்பு கொள்ள: saxbalachandar@gmail.com

கூடுதல் ஆர்வத்துக்கு: எம்.எஸ்.விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.